குரங்கு, காட்டு யானை உட்பட காட்டு விலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் விசேட அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். பிரச்சினையின் பாரதூரத் தன்மையை குறிப்பிடும் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
குரங்கு உட்பட காட்டு விலங்குகளினால் விவசாய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிக்கை பெறுகிறது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. ஆனால், இதுவரை நடைமுறைக்கு சாத்தியமான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கிராம புறங்களில் வீடுகளை குரங்குகள் ஆக்கிரமித்துள்ள.
ஒருசிலருக்கு 30 முதல் 40 வரையான தென்னை மரங்கள் உள்ளன. ஆனால், ஒரு தேங்காய் சம்பல் செய்வதற்கு கூட குரங்குகள் தேங்காய்களை விட்டு வைப்பதில்லை.
சுற்றாடல்துறை நிபுணர்களின் அறிக்கைகளை பெற்று, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஏனெனில், அவர்கள் சுற்றாடல் மற்றும் காட்டு விலங்குகளின் நலன் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவார்கள்.
ஆகவே, காட்டு விலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயற்படுத்த துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.