உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று தற்போது வவுனியாவில் இடம்பெறுகின்றது.
இந்தக் சந்திப்பு இன்று காலை 10.30 க்கு ஆரம்பமாகியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் குறித்தும், அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
எனினும், குறித்த கடிதத்தில் தாம் கையொப்பம் இடவில்லை என கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கூறியதாக தகவல் வெளியிடப்பட்டது.
இதனால், கட்சிக்கும் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும், கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையிலேயே, கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த கூட்டமொன்றுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வரை நடைபெறும் இந்தக் சந்திப்பின் பின்னர், ஊடகங்களை சந்தித்து சந்திப்பு குறித்து விளக்கமளிக்க உள்ளதாக எமது வவுனியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.