கடந்த மே மாதம் 10ஆம் திகதி யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள ஓர் உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை கண்டறியப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மே மாதம் 12ஆம் திகதி உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் கடையினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகரால் கடை சீல் வைத்து மூடப்பட்டது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை (8) குறித்த வழக்கு நீதிமன்றில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உணவக உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன், உணவக திருத்த வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கடையினை மீள திறப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியது.