குழந்தைத் தொழிலாளர்களை தமிழக அரசு ஊக்குவிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆவின் அலுவலகத்தில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், உண்மை நிலை நேர் எதிராக இருக்கிறது. சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல், அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திமுக அரசு, தற்போது குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.
உடனடியாக சிறார்களை பணியில் அமர்த்தியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசு பணிகளில் இடம்பெறாத வண்ணம் கருப்புப் பட்டியலில் வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணை திறப்பு: அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மணிமுத்தாறு அணை, ஒருவாரம் தாமதம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் அணையைச் சுற்றிய 7 கிராம விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே, விவசாயிகளை ஏமாற்றாமல், அணை திறப்பு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என தெரி வித்துள்ளார்.