டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

100 0

டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-ல் திறக்கப்படவுள்ளது. இதனால், நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 4,700 கி.மீ தொலைவுக்கு பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சென்ற மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை, 3,800 கி.மீ தொலைவு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மீதமுள்ள 900 கி.மீ தொலைவுள்ள பாசன வாய்க்கால்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக தூர் வாரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்கள் நீர்வளத் துறையின் மூலம் தூர்வாரப்படுகின்றன. சி மற்றும் டி வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.