சென்னை தலைமை செயலகத்தில் ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–திருச்சி கோ. அபிஷேக புரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும் 3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 தங்கும் அறைகள், 3 சிறப்பு விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை, கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
ஆசிரியர் இல்லத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.அனைவருக்கும் இடை நிலை கல்வித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலை மற்றும் மாதிரி பள்ளி வளாகங்களில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 மாணவியர் விடுதிகள்;
கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 கோடியே 87 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 பள்ளிக் கட்டடங்கள்; அரியலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 54 கோடியே 7 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 மாதிரி பள்ளிக் கட்டடங்கள்;
அரியலூர், தருமபுரி, மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2 கோடியே 7 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 8 அறிவியல் ஆய்வுக் கூடங்கள்;
234 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 269 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1716 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 196 ஆய்வுக் கூடங்கள்;
சேலம், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 69 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 13 ஆய்வுக் கூடங்கள்;
57 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 526 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 747 கூடுதல் வகுப்பறைகள், 26 தொடக்கப் பள்ளி கட்டடங்கள், 7 நடுநிலைப் பள்ளி கட்டடங்கள், 2 உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்கள்;
காஞ்சிபுரம் மாவட்டம் எலப்பாக்கம் மற்றும் கடலூர் மாவட்டம் வீரானந்த புரம் ஆகிய இடங்களில் 24 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள நூலக கட்டடங்கள்; சேரன்மாதேவி ஒன்றியத்தில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 408 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை, கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 35 கோடியே 37 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 22 பள்ளிக் கட்டடங்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கணினி சார் கற்றல் அனுபவங்களை அளிக்கும் வகையிலும், செயல்முறையுடன் கல்வி கற்கும் வகையிலும் 80 லட்சம் ரூபாய் செலவில் டிஜிட்டல் கண்டென்ட் பாடங்களை உருவாக்கி, கைப்பேசி மற்றும் கணினி போன்றவற்றின் வாயிலாக மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம்; ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கி அதன் மூலம் கல்வி தரத்தை மேம்படுத்திட 2 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் 58 இடங்களில் கல்வி செயற்கைகோள் வசதி ஆகியவற்றை முதல்- அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பள்ளி மாணவ, மாணவியர் எளிதில் கற்கும் வகையில் தமிழக அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் 5 லட்சம் ரூபாய் செலவில் ஒளி ஒலி பாடல்களாக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட 5 பள்ளி மாணவ, மாணவியர் பெற்றுக் கொண்டனர்.