வாகரையில் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி

142 0

சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி வியாழக்கிழமை (8) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கண்டனப் பேரணியில் வாகரை பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்துகொண்டனர்.

வியாழக்கிழமை (8)  காலை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஓன்று கூடிய பிரதேச மக்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரை வாகரை திருமலை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.இதன்போது கோஷங்களை எழுப்பியவாறு  ஊர்வலமாக நடந்து சென்று வாகரை பிரதேச செயலகத்தின் வாயிலுக்கு முன்பாக நின்று கோஷங்களை எழுப்பினர்.

‘பொறுப்பான அதிகாரிகள் பொறுப்பாக நடக்க வேண்டும்.’ ‘மண் மாபியாக்களுக்கு பின்னால் இருப்பது யார்.? ‘அரசே வளச் சுரண்டலுக்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்து.’ ‘இறைவன் கொடுத்த வளங்களை சுரண்ட இவர்கள் யார்? ‘உங்கள் வாழ்விற்காக எங்கள் வளங்களை சுரண்டாதே,’ ‘இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்,’ ‘எமது எதிர்கால சுதந்திரத்திற்காக இயற்கையை பாதுகாப்போம்.’ ‘அளவிற்கு அதிகமான வளச் சுரண்டலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? ‘ஏழைகளின் வாழ்கையை அழிக்காதே வளங்களைச் சுரண்டாதே’ என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

கண்டனப் பேரணியில் இறுதியில் வாகரை கதிரவெளியில் மேற்கொள்ளப்படவுள்ள இல்மனைட் அகழ்வினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்,இறால் பண்ணை ஆரம்பிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள்,சட்ட விரோத மணல் அகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய கோரிக்கை அங்கு ஒன்று கூடியவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டப்பட்டது.

பின்னர் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய மகஜர்  பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர்,கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்களுக்கு வேண்டுகோளிட்டு வாகரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஜி.பிரணவனிடம் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டது.

கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்ட உதவிப் பிரதேச செயலாளர்  இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இப் பிரதேசத்தில் இடம்பெறாதிருக்க அதனை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக பதில் தெரிவித்தார்.

வாகரை பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கான முயற்ச்சி மற்றும் இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகள் முற்றாக நிறுத்தப்படவில்லை.மேற்படி திட்டங்களை நிறுத்தக்கோரி பிரதேச மக்கள்,சிவில் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் சில அதிகாரா வர்க்கத்தினர் இந்த திட்டத்தினை செயற்படுத்த முனைகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.