பிபில கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம் பிடித்து வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி அவரிடமிருந்து அதற்கான பதிலை பெற்று விடை எழுதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவதானித்த பரீட்சை மண்டப ஆசிரியர் ஒருவர் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, பிபில வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே. சுசில் விஜேதிலகவின் ஆலோசனையின்பேரில் மஹியங்கனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.டி. டயஸ், இந்த மாணவி பயன்படுத்திய கைத்தொலைபேசியைக் கைப்பற்றியதுடன் இதனுடன் தொடர்புடைய ஆசிரியரை பிபில கல்வி வலயத்துக்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிபில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.