உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுமார் 15000 கூட்டங்களை நடத்த உள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கரங்களை வலுப்படுத்தவும்? கிராமிய மட்டத்தில் அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டில் நிச்சயமாக நடத்தப்படும்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே நேர்முகத் தேர்வு நடத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுமார் பத்தாயிரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கட்சி என்ற ரீதியிலும் கூட்டமைப்பு என்ற ரீதியிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் சிறந்த முறையில் வெற்றியீட்ட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
பாழடைந்த வீடுகளில் சட்டி, பானைகளை உடைத்து சுதந்திரக் கட்சியின் பலத்தை சிலர் குறைத்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.இந்த அனைவருக்கும் கட்சியின் பலத்தை விரைவில் நிரூபிப்போம் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.