பிளாஸ்டிக் பொருட்களாலும் நெகிழிப் (பொலித்தீன்) பொருட்களாலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்க்கும் முகமாக, அப்பொருட்களைத் தமது அன்றாடப் பாவனையில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு, கிராம மக்கள் உறுதிபூண்டிருப்பதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
வாகரை, பால்சேனை கடற்கரையில் பிளாஸ்டிக் உட்பட நெகழிகளையும் இன்னும் பிற உக்காத பொருட்களையும் திண்மக் கழிவுகளையும் அகற்றி, கடற்கரையைத் துப்புரவு செய்யும் சிரமதானப் பணி செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.
பால்சேனை, நாகபுரம் ஆகிய கிரமங்களின் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடற்கரையோர சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
‘வீஎபெக்ற்’ (We Effect) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் இறுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை அன்றாட வீட்டு உபயோகத்தில் இருந்து தவிர்ப்போம் எனும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.