ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

100 0

 இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பில் நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபு வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திமுக பொதுச்
செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளி செங்கோல் வழங்கினார். சென்னை மேயர் ஆர்.பிரியா மற்றும் தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 1949 செப்டபர் 17-ம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கப்பட்டது. அதே வடசென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடங்குகிறது. கட்சி தோன்றிய வடசென்னையில் நூற்றாண்டு விழா தொடங்குவது சிறப்பானது. இந்த மேடையில் இருக்கும் தோழமைக் கட்சிகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கரூணாநிதி.

அரசியல் கட்சி தலைவர். மாநிலத்தின் தலைவர் மட்டுமில்லாமல் உலக தலைவராக செயல்பட்டவர் கருணாநிதி. திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி. திராவிடம் என்ற சொல்லை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடி கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்கிறது திராவிட இயக்கம்.

‘கொள்கை வாரிசு நான்’: திராவிட மாடலின் வளர்ச்சிதான், இந்தியாவில் தமிழகத்தை வளரச்செய்யும். இந்த தன்னம்பிக்கையை என்னுள் வளர்த்தவர் கருணாநிதி. நான் அவர் கொள்கை வாரிசு. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த நன்மையை சொல்லத்தான் இந்த நூற்றாண்டு விழா.

ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில், யார் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வேறுபாடு மறந்து இந்தியாவை காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி அமைய கூட்டணி அமைத்தது போல், தேசிய அளவில் அமைய
வேண்டும் என நான் அகில இந்திய தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். மதவாத பாஜக சக்தியை வீழ்த்த தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தேவையற்றமுரண்களுக்கு இடம் தரக்கூடாது.

அவதூறுகளை பரப்ப பாஜகவினரிடம் ஒரு கூட்டம் உள்ளது. தமிழகத்தில் ஆளுநராக இருப் பவர் செய்யும் சித்து விளையாட்டுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டுள்ளோம். ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் நம்முடன் இருக்கின்றனர். நம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நம் உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். நாடாளுமன்ற தேர்தல் நமக்காக அல்ல; நாட்டுக்காக; ஜனநாய கத்தை காப்பாற்ற நடக்கும் தேர்தல். இதில் மகத்தான வெற்றி பெற சபதமேற்போம், உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இருந்த பேராண்மை இன்றைய முதல்வருக்கும் உள்ளது. சென்னையை மட்டுமே மையமாக வைத்து சென்னைபல்கலைக்கழகம் செயல்படுகிறது. சென்னையுடன் கருணாநிதி பெயரையும் சேர்த்து அந்த பல்கலைக்கழகத்துக்கு பெயரிடுவது என்பது அவரது நூற்றாண்டு விழாவுக்கு பொருத்தமாக இருக்கும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: 14 வயது முதல் இறுதி மூச்சுவரை எண்ணற்ற போர்க்களங்களை சந்தித்தவர் கருணாநிதி. உலகம் உள்ள வரை தமிழ் இருக்கும். தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். அதுவரை கருணாநிதியும் இருப்பார்.

விசிக தலைவர் திருமாவளவன்: சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையுடன் அரசியலில் களம் இறங்கியவர் கருணாநிதி. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான கூட்டணி அமைக்க தலைவர்கள் முன்வர வேண்டும். இதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் உதயநிதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருவிக நகர் வடக்கு பகுதி திமுக செயலாளர் செ.தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரண்மனை தோற்றத்தில் மேடை: விழா மேடை அரண்மனை தோற்றத்தில் பிரம்மாண்டமாக அமைக் கப்பட்டிருந்தது. மேடையின் இருபுறமும் டிஜிட்டல் திரையில் மறைந்த
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. உச்சியில் திமுகவின் கொடி பறக்க அதற்கு கீழே கலைஞர் 100 என பிரம்மாண்ட விளக்குகளால் எழுதப்பட்டிருந்தது. கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாள், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோர் இருக்கும் படங்கள் பெரிய டிஜிட்டல் திரையில் மேடையின் பக்கவாட்டில் இடம் பெற்றிருந்தன.