டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், வீரர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அளித்த புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் வாபஸ் பெற்றது.
இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், நடுவர் வழங்கிய எல்.பி.டபிள்யூ.வை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் படி அப்பீல் செய்வதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய பெவிலியனில் இருந்த தங்கள் அணி வீரர்களின் உதவியை சைகை மூலமாக நாடியது பலத்த சர்ச்சையாக கிளம்பியது.
டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்வது குறித்து களத்தில் இருக்கும் வீரர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க முடியும். விதிமுறையை மீறி நடந்து கொண்ட ஸ்டீவன் சுமித்தை தண்டிக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட்கோலி உள்பட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய, இந்திய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நேரடி வார்த்தை மோதல் ஏற்பட்டது. விராட்கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஆஸ்திரேலிய கேப்டனை வெளிப்படையாக விமர்சித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தியது.
ஆனால் இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்தது. இதற்கிடையில் இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.சி.சி.யிடம் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் வெளியில் இருக்கும் வீரர்களுடன் சைகை மூலம் ஆலோசனை பெற்றதற்கான வீடியோ ஆதாரமும் புகாருடன் அனுப்பப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் இடையே மும்பையில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்றும் கிரிக்கெட் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படும் என்றும் இரு தரப்பினரும் உறுதி அளித்தனர். கருத்து வேறுபாடுகளை மறந்து போட்டி தொடர் சிறப்பாக நடைபெறுவதில் இரு அணிகளும் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் மீதும் அளித்த புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்ப பெற்றது.