பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் கைது செய்யும் உத்தரவை கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்னர்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் பெற்ற பல கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல், லண்டனில் குடியேறி விட்டார். யுனைடெட் புருவரிஸ் என்ற மதுபான நிறுவனத்தில், தனக்கும், தன் நிறுவனங்களுக்கும் உள்ள பங்குகளை அவர் ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். அந்த பங்குகளை ஒரு இங்கிலாந்து மதுபான நிறுவனத்துக்கு அவர் மாற்ற முயன்றபோது, கடன் மீட்பு தீர்ப்பாயம் தடை விதித்தது. அதனால், விஜய் மல்லையாவும் அந்த பங்குகளை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
ஆனால், அந்த உறுதிமொழியை மீறி, அவர் பங்குகளை மாற்றினார். இதனால், அவருக்கு எதிராக கர்நாடகா ஐகோர்ட்டில் வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, அவருக்கு எதிராக ஜாமீனில் விடக்கூடிய கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், நீதிபதிகள் பி.எஸ்.பட்டீல், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, விஜய் மல்லையாவுக்கு எதிராக நேற்று மீண்டும் கைது வாரண்டு பிறப்பித்தது. இதை ஜூன் 1-ந் தேதிக்குள் செயல்படுத்த உத்தரவிட்டது.