வாகனத்தில் அடிபட்டு பலியான தாய் குரங்கை பிரிய மறுத்த குட்டி குரங்கு

300 0

சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்டு பலியான தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு பொதுமக்கள் கண் கலங்கினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரோட்டோரம் அதிக அளவில் குரங்குகள் நடமாட்டம் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வர்கள் குரங்குகளுக்கு பொறி, பழம், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வீசுகின்றனர்.

இந்த உணவு பொருட்களை ரோட்டில் பாய்ந்து குரங்குகள் எடுக்கும் போது, அந்த வழியாக வேகமாக வரும் மற்ற வாகனங்கள் மோதி குரங்குகள் உயிரிழந்து வரும் அவலமும் தொடர்கதையாக உள்ளது.

தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்லும் வழியில் எலந்தூர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் தின்பண்டம் வாங்க ரோட்டை கடந்த ஒரு குரங்கு, மற்றொரு வாகனத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

இதைகண்ட அந்த குரங்கின் குட்டி குரங்கு, தாய்குரங்கை எழுப்ப முயற்சித்தது. அது இறந்ததை கண்டு அந்த குட்டி குரங்கு சுற்றி…சுற்றி வந்து பிரிய மனமில்லாமல் தவித்தது.

மலர் தூவி குரங்கை நல்லடக்கம் செய்த மக்கள்.


இதைகண்ட அப்பகுதி மக்கள் மனவேதனை அடைந்தனர். பலர் இறந்த தாய் குரங்குக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கு கூட்டம் அதிகளவில் கூடியதால், தகவல் அறிந்த கர்நாடக மாநில சாம்ராஜ் நகர் போலீசார் விரைந்து வந்தனர். இறந்து கிடந்த தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு அவர்களும் கண் கலங்கினர்.

பிறகு ஒரு வழியாக தாய் குரங்கை குட்டி குரங்கிடமிருந்து மீட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.