துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் 2016-ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார்.
தற்போதைய பயணத்தின்போது பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை, இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து உரையாற்றுவார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை திட்ட தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியை, நேஷனல் பப்ளிக் ரேடியோவின் அஸ்மா காலித் பேட்டி கண்டார். அப்போது பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஜான் கிர்பி கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து மறைமுகமான விமர்சனம் வைக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் மிளிர்கிறது. இந்தியாவுடன் ஆழமான, வலிமையான ஒப்பந்தங்கள், நட்புறவை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்கா விரும்புகிறது. இதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இறங்கியுள்ளன.
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அவர் இங்கு வரும்போது பல்வேறு விஷயங்கள், திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.
உங்கள் நண்பர்களுடன் தான் நீங்கள் நினைத்ததை செய்ய முடியும். அதேபோல், உங்கள் நட்பு நாடுகளுடன்தான் நீங்கள் சில விஷயங்களைச் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் மோடியின் பயணத்துக்கு அமெரிக்காவில் அதிக முக்கியத்துவம் தரப்படுவது ஏன் என்று அஸ்மா காலித் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து ஜான் கிர்பி கூறியதாவது:
சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும், எதிர்க்கவும் இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் ஒப்பந் தங்களை அதிகப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சீனாவின் பொருளாதார எழுச்சி பிரச்சினை தொடர்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதிகரித்த போர்க்குணத்துடன் இரு நாடுகளும் போராடி வருகின்றன. எனவே இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு, கூட்டுறவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா இடையே இருதரப்பு ரீதியாக மட்டுமல்ல, பல்வேறு தரப்பிலும் ஒத்துழைப்புடன் அமெரிக்கா செயலாற்றுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன.மேலும் இந்தப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இரு நாடுகளிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் பிரதமர் மோடிஇங்கு வருவதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகவும்எதிர்பார்க்கிறார். இந்தியாவுடனான எங்கள் ஒப்பந்தம் முகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் ராகுல்..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் அதிகமாக விமர்சனங்களை ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார். இந்த வேளையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும், அமெரிக்கா – இந்தியா வர்த்தக கவுன்சிலும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருவது முக்கியத்துவம் பெற்று உள்ளது.