சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தங்கமுத்து, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கோவிலில் இருந்த விநாயகர் சிற்பம் 1000 ஆண்டுகள் பழமையானது எனவும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிற்பம் 3 அடி உயரமும், 1 ½ அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் லளிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார்.
தலையில் கரண்ட மகுடம் தரித்தும் அகன்ற 2 காதுகளுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமானது நான்கு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் முறிந்த தந்தமும், முன் இடது கரத்தில் மோதகமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் தும்பிக்கை மோதகத்தை எடுப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் இந்த விநாயகர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
முன் மண்டபத்தூணில் 2 ஆண் சிலை ஆடை ஆபரணங்களுடன் எதிரெதிரே இரு கை கூப்பி வணங்கியபடி உள்ளது. அதில் ஒருவர் திருமலை நாயக்க மன்னராக இருக்கலாம். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர்.
இவர் கி.பி.1623-1659 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரது காலத்தில் தான் எந்த ஒரு கோவில் பணி செய்தாலும் அங்கு தனது உருவச்சிலையை இரு கை கூப்பி அந்த தெய்வத்தை வணங்கியபடி வைப்பது வழக்கம். இங்கும் அதுபோல் வணங்கியபடி சிலை உள்ளது. இந்த கோவிலின் முன் மண்டபம் அவரால் கட்டப்பட்டு இருக்கலாம். மற்றொருவர் அவரது பிரதானியாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.