மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.
இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.
அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகத்தை முதல் 300 இடங்களுகு்குள் கொண்டு வருவதே இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.