சென்னை, அம்பத்தூரில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30-க்கும்மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சிறார்கள் ஐஸ்கிரீம் பேக்கிங் பிரிவில் பணியாற்றியது தொடர்பான வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட சிறார்கள் ஆவின் நுழைவு வாயில் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “ஆவினில் குழந்தைத் தொழிலாளர் பணியாற்ற வாய்ப்பு இல்லை. அவ்வாறு குழந்தை தொழிலாளர் பணியாற்றியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதிபட தெரிவித்தார்.