பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆகவே தற்போது பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது.
நாட்டின் எதிர்காலத்துக்காக சகல அரசியல் கட்சிகளும் பொதுக் கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற சிவில் விமான சேவை மற்றும் கப்பற்துறை சேவை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு என்ற ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை கடந்த ஆண்டு எதிர்கொண்டோம். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.பாரிய போராட்டத்துக்கு பின்னர் நிலைமை இப்போது மாறி வருகின்றது.
நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. தற்போது நாடு சரியான பாதையில் செல்கின்றது.
டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள போதும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.
பொருளாதார மீட்சியின் நன்மைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.ஆகவே விலை அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கதைக்கின்றனர். தேர்தல் அவசியமானது என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். ஆனால் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதன்படி இந்த நேரத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது தேர்தலுக்கு அல்ல.பொருளாதார முன்னேற்றத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நாட்டின் பண வீக்கத்தை குறைத்து மக்களுக்கு வாழக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். இப்போது மக்களுக்கு புரிந்துள்ளது. போராட்டங்களுக்கு தலைமை வழங்கியவர்கள் யார் என்பதனையும் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தோம். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சகல அரசியல் கட்சிகளும் பொது கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.