மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபைகள் வெள்ளை யானை போல் செயற்படுகின்றன. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமைமையும் இரத்து செய்ய வேண்டும்.
2024 ஆம் ஆண்டே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேர்தல் ஒன்றை நடத்தாமல் மக்கள் ஆணையை தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
அரசியல்வாதிகளுக்கு சாதகமான நேரத்தில் தேர்தலை நடத்தினால் முறையற்ற மக்களாணையே வெளிப்படுத்தப்படும். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.
தமக்கு மக்களாணை இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டில் கொவிட் பெருந்தொற்று தாக்கத்துக்கு மத்தியில் தேர்தலை நடத்த கூடாது என குறிப்பிட்டு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரது நோக்கத்துக்கு அமைய பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் இடம்பெறவில்லை.
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஆளுநர்களினால் நிர்வகிக்கப்படுகிறது.அரசியலமைப்பு ரீதியில் ஆளுநர்களின் நிர்வாகம் இடம்பெற்றாலும் அது முறையற்றது.மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும்.
நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும்.இந்த தேர்தலை பிற்போட்டால் சகல அரசியல் கட்சிகளும் ஏதாவதொரு வழிமுறையில் பாதிக்க நேரிடும்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து மாகாணசபை முறைமையை இரத்து செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தற்போது தான் மாகாண சபைகள் வெள்ளை யானை போல் செயற்படுகின்றன.
அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்த ஜனாதிபதி விரும்பினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆகவே பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைத்து புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்கலாம் என்றார்.