தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்த நாட்டில் இயல்பானதே.
30 ஆண்டுகளாக யுத்த சூழலில் வாழ்ந்த தமிழர்களுக்கு நீதியை வழங்காவிடின் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது.கர்மவிணை தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற துறைமுகங்கள்,கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் பொதுமக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு,கொலை முயற்சிக்கு உள்ளாகியுள்ளார்.பொது மக்களின் முயற்சியால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரை விசாரிக்காமல்,கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது விசாரணைகள் திரும்பியுள்ளன.
தமிழ் தேசிய முன்னணியின் வடமராட்சி மகளிர் அணி தலைவி ஜெகதீஸ்வரன் சற்குண தேவி நேற்று முன்தினம் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,இன்று வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் உதய சிவம் வற்றாப்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மருதங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பயணத் தடை விதித்துள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அரச புலனாய்வு பிரிவினரால் கொலை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது அது குறித்து விசாரணை செய்யாமல் பாதிக்கப்பட்ட தரப்பினர் கைது செய்யப்படுவது இந்த நாட்டில் எவ்வகையான சட்டம்,ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
இவ்வாறான தன்மையே கடந்த காலங்களிலும் இந்த மண்ணில் இடம்பெற்றது.இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை.எமக்கு எதிரான துப்பாக்கி முனை திரும்பும் சம்பவங்களே காலம் காலமாக பதிவாகுகிறது.
தமிழரின் உரிமைக்காக தமிழ் தலைமைகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச கட்டமைப்பினர் அறவழி போராட்டத்தை வன்மையான முறையில் தாக்கினார்கள்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது,அவரது தலையில் காயமேற்படுத்தப்பட்டது.அவர் காயத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்து உரையாடிய போது சிங்கள அரசியல்வாதிகள் ‘சண்டை என்றால் காயம் ஏற்படும் ‘என எள்ளி நகையாடினார்கள்.
அதேபோல் 1956 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்ற போது திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பகுதியில் 150 தமிழ் விவசாயிகள் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கும் போது சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் பல இந்த நாட்டில் அரங்கேறியுள்ளன.எதற்கும் நீதி,நியாயம் கிடைக்கப்பெறவில்லை.ஆனால் நிரபராதிகளாக இருந்த தமிழர்கள் மீத துப்பாக்கி முனை திருப்பப்பட்டுள்ளது.
டயஸ்போராக்களுடன் இணைந்து ஆயுத கலாசாரத்தை தூண்ட கூடாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகிறார்.2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர் தரப்பில் இருந்து துப்பாக்கி நீண்டுள்ளதா,?குண்டு வெடித்துள்ளதா ?,தமிழ்ர்கள் தமக்கு நேர்ந்த அநீதிக்காக சர்வதேசத்தை நாடியுள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்கள் பிரதிநிதி மீது எவ்வாறு துப்பாக்கி முனையை திருப்ப முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுவரை நீதி கிடைக்கவில்லை.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளார்கள்.அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.ஆனால் ஜோசப் பரராச சிங்கத்துக்கு நீதி கிடைக்கவில்லை.
அதே போல் பல தமிழ் அரசியல் தலைமைகள் பகிரங்கமாக கொல்லப்பட்டார்கள் எவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.2011 ஆம் ஆண்டு அனுராதபுரம் பகுதியில் நான் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பினேன்.
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நேர்ந்த சம்பவம் பாரதூரமானது.இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது.
அரசாங்கத்தின் பயங்கரவாதமாக இதனை கருத வேண்டும்.தென்னாபிரிக்காவின் நல்லிணக்கம் பற்றி அரசாங்கம் பேசுகிறது.பாராளுமன்ற உறுப்பினர்களை அடக்குதல் ஊடகங்களை அடக்குதல் ,ஜனநாயகமா தன்னை ஒரு லிபரல்வாதியாக காண்பிக்கும் ஜனாதிபதி தனது பிறிதொரு முகத்தை காண்பிக்கும் வகையில் செயற்படுகிறார்.இதன் ஒரு செய்தியே தற்போது வெளிப்படுகிறது.
30 ஆண்டுகள் யுத்த சூழலில் வாழ்ந்த தமிழர்கள் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் வீதியில் உள்ளார்கள்.தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் செத்து மடிகிறார்கள்.
தமிழர்களின் காணிகள் தொல்பொருள், பாதுகாப்பு படைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் விவகாரத்தில் அரசாங்கம் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது.
குற்றஞ் செய்தவரை நீதிபதியாக நிறுத்தும் போது எவ்வாறு நீதியை வழங்க முடியும்.நல்லிணக்கம் பற்றி பேசும் தகுதி இலங்கை அரச தலைவர்களுக்கு உண்டா ?
தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.இன்று கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதி நாளை ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நேரிடும்.எமது மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் போது தமிழ் தலைமைகள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.கர்ம வினை தொடரும் நியாயமான நீதி வழங்குகள் இல்லாவிடின் இந்த நாடு அழிவதை தடுக்க முடியாது என்றார்.