இலங்கையில் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தொற்றா நோய்கள் காரணமாக இடம்பெறுகின்ற அதிகளவான மரணங்களுக்கு இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய், சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் முக்கிய காரணங்களாக அமைவதுடன், ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்களால் 1,20,000 பேர் இறக்கின்றனர்.
புகையிலை மற்றும் மதுபான பாவனை, அதிகரித்த உடற்பருமன், உயர் குருதியழுத்தம், குருதியில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் மற்றும் குருதியில் கொலஸ்ட்ரோலின் அளவு அதிகரித்தல் போன்றன இந்நோய்களுக்கான முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், இந்நோய்களை முற்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனை சேவைகளை வழங்கல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு இயலுமான வகையில், சுகாதாரக் கட்டமைப்புக்களை பலப்படுத்த வேண்டியுள்ளது.
தொற்றல்லா நோய்களை தடுப்பதற்கான முதலாவது தேசியக் கொள்கை 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த கொள்கையை மீளாய்வுக்குட்படுத்தி மதிப்பீடு செய்து ஏற்புடைய பங்காளர்களின் ஒத்துழைப்புக்களுடன் திருத்தப்பட்ட புதிய கொள்கையொன்று வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையில் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், குறித்த தேசிய கொள்கை மற்றும் மூலோபாய சட்டத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காகவும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.