பெறுமதிசேர் வரி விடுவித்தலின் அடிப்படை விதிமுறை மற்றும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு வேலைத்திட்டத்துக்கமைய, பெறுமதிசேர் வரி பற்றிய முக்கிய இரண்டு மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
அதன்கீழ், அதிகளவு விடுவித்தலை நீக்கி, பெறுமதிசேர் வரி முறைமையை மறுசீரமைப்புச் செய்தல், இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமை நீக்கப்பட வேண்டியுள்ளது.
தற்போதுள்ள பெறுமதிசேர் வரியை விடுவித்தல் மீண்டும் அடிப்படை விதிமுறைகளுக்கமைய அண்ணளவாக மொத்த தேசிய உற்பத்தியின் 1.2 சதவீதமான வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்புண்டு.
அதற்கமைய, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கான விடுவிப்புக்களைப் போலவே, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீதான அழுத்தங்களை இலகுபடுத்துகின்ற மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை பாதுகாக்கின்ற விடுவிப்புக்களை தொடர்ந்தும் பேணிக்கொண்டு, பெறுமதிசேர் வரி விடுவிப்புகளிலிருந்து அதிகளவை நீக்குவதற்கும், பெறுமதிசேர் வரியை மீளச் செலுத்துவதற்காக மிகவும் முறை சார்ந்த பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தி, தற்போது நடைமுறையில் உள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையை 2024.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அகற்றுவதற்கு ஏற்றாற்போல் பெறுமதிசேர் வரிச்சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.