சினிமா, தொலைக்காட்சி தொழிற்றுறைகளுக்காக சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனம்

84 0

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழிற்றுறைகளின் அபிவிருத்திக்காக சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை தாபித்தல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் சினிமாவின் அபிவிருத்திக்காக 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் பிரகாரம் அரச திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டுள்ளதுடன், 1980 ஆம் ஆண்டில் அது தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமாக பெயரிடப்பட்டது.

தற்போது திரைப்படத் தொழிற்றுறை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து மிகவும் மோசமான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதுடன், தொழிற்றுறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒழுங்குபடுத்தல் பணிகளில் ஈடுபடக்கூடிய சுயாதீன நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், திரைப்படத் தொழிற்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும், குறித்த தொழிற்றுறையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுயாதீன நிறுவனமொன்று இருத்தல் பொருத்தமானதெனத் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, சினிமா மற்றும் திரைப்படக்காட்சி தொழிற்றுறைகளின் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும், வழிகாட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.