புகார் புத்தகத்தை தர மறுக்கும் மின்வாரிய அலுவலகம்

80 0

பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், வீட்டில் உள்ள மின்சாதனங்கள் பழுதடைகின்றன. இதுகுறித்து புகார் கொடுக்கப் போனால், நசரத்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் புத்தகத்தை தர மறுக்கின்றனர் என்று ‘உங்கள் குரல்’ சேவையில் ஒரு வாசகர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ சேவையை தொடர்பு கொண்டு, வாசகர் கோதை ஜெயராமன் கூறியதாவது: பூந்தமல்லி, நசரத்பேட்டை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் 850-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு மற்றும் காலை, மாலை வேளைகளில் மின்தடை ஏற்படுகிறது.

இதனால், வீட்டில் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுவதோடு, இரவு நேரத்தில் தூங்க முடியாமல் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அத்துடன், மின்விநியோகத்தில் குறைந்த அழுத்தம், உயர் அழுத்தம் மாறி மாறி ஏற்படுகிறது. இதனால், வீடுகளில் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி உள்ளிட்ட மின்சாதனங்களும் பழுதடைகின்றன. இதுகுறித்து புகார் பதிவு செய்ய நசரத்பேட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றால், புகார் புத்தகத்தை தர மறுக்கின்றனர். ‘‘புகாரை சொல்லுங்கள், நாங்களே எழுதிக் கொள்கிறோம்’’ என்கின்றனர்.

அதேபோல, மின்னகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுப்பது இல்லை. தவிர, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப் பித்தால், நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக தொகை கேட்டு நிர்ப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் மின்விநியோக சாதனங்களில் பழுது ஏற்படுகிறது. இதனால், மின்தடை ஏற்படுகிறது.

இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய மின்இணைப்பு உள்ளிட்ட எந்த சேவைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் தொகை வசூலிக்க கூடாது என்று அதிகாரிகள், ஊழியர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.