வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை

79 0

வரி கோப்புகள் திறக்கப்பட்டாலும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. வரி செலுத்தவேண்டியவர்களும் அதனை புறக்கணித்து வருகின்றனர். இதனால் நலனோம்பு மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார்.

வரி செலுத்தவேண்டியவர்களின் பதவிநிலை மற்றும் வரி விதிப்புக்கு உள்வாங்கப்படுபவர்களின் பட்டியல் நிதி அமைச்சினால் கடந்த வாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வரி செலுத்துவது வரி செலுத்தவேண்டியவர்களில் மிகவும் குறைவானவர்களாகும். என்றாலும் தற்போது வரி செலுத்த வேண்டியவர்களின்  கோப்புகள்  திறக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்றில்லை.

என்றாலும் வரி  கோப்புகள்  திறப்பதன் மூலம், வரி செலுத்துவதற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு இல்லை என்றால் வரி செலுத்தவேண்டியவர்களும் வரி செலுத்தாமல் அதனை புறக்கணித்து விடுகின்றனர்.

அரசர்களது காலத்தில் இருந்து நாட்டில் வரிகளின் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தின் மூலமே நலநோம்பு வேலைத்திட்டங்கள் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் எந்தவொரு நாட்டுக்கும் வரி மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்களில் நாட்டில் பாரியளவில் வரி குறைப்பு செய்தமையாலே அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது என்றார்.