நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம் அனைவரதும் இணைந்த முயற்சியே – பிரதம நீதியரசர் ஜயந்த

101 0
நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவது அனைவரினதும் இணைந்த முயற்சி என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.

நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (2) நடைபெற்ற 2023 – 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த சில வருடங்களில் பல சவால்களுக்கு மத்தியிலும் சட்டத்தரணிகள் சங்கம் தனது உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு கருப்பொருள்களின் கீழ் மாநாடுகளை நடத்தியது.

‘சட்டத் தொழிலின் இயலுமையை மீள்கட்டமைத்தல் மற்றும் இசைவாக்கமடைதல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நெருக்கடியின் ஊடாக பயணித்தலில் சட்டத்தின் வகிபங்கு’ என்ற 2022ஆம் ஆண்டுக்கான கருப்பொருளின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்தோம்.

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் அனைவரும் முன்னொருபோதும் இல்லாத சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

ஆனால், இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும், வாழ்வில் முன்னேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பு என நாங்கள் நம்புகிறோம் என்றார்.