நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கும், நாட்டை எதிர்பார்க்கும் திசையில் நகர்த்துவதற்கும் தொலைநோக்கு மற்றும் ஒழுக்க நெறியுடைய, ஜனநாயகத்தை மதிக்கின்ற தலைமையொன்று அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.
நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (2) நடைபெற்ற 2023/2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சம்பிரதாயமாக தேசிய சட்ட மாநாடானது சட்டத்தொழில் தொடர்பான தினசரி விடயங்களை பற்றி கலந்துரையாடவே அர்ப்பணித்துள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாடு 2023/2024 வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய நலன்களுக்காகவும் சிறந்த எதிர்காலத்துக்காகவும் சட்டத்தரணிகள் சமூகத்தின் வகிபங்கு பற்றி கலந்துரையாட இந்த மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.
இந்த முயற்சியில் பல தரப்பினருடன் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
முன்னெப்போதையும் விட நமது நாடு அரசியல் மற்றும் பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல. எனவே, நாட்டில் அத்தியாவசியமான சட்டக் கட்டமைப்பும் சுதந்திரமான நீதித்துறையும் இருப்பது அவசியம்.
சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கும், நாட்டை எதிர்பார்க்கும் திசையில் நகர்த்துவதற்கும், தொலைநோக்கு மற்றும் ஒழுக்க நெறியுடைய – ஜனநாயகத்தை மதிக்கின்ற – நமது குடிமக்களின் உரிமைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தலைமையொன்று அவசியம்.
எங்கள் தொழில் வரலாற்றில், முதல் முறையாக சட்டத்துறையில் மறுசீரமைப்பு செய்யவேண்டிய அல்லது திருத்தப்படவேண்டிய பகுதிகள் குறித்து அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துரையாட இந்த தேசிய சட்ட மாநாட்டை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதைப் போன்று, இலங்கையை வளர்ச்சியடையும் நாட்டிலிருந்து அபிவிருத்தி அடைந்த நாடாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் சட்டங்களை எமது சட்டக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதும், அதற்காக சட்டங்களை இயற்றுபவர்களுக்கு உந்துதல்களை ஏற்படுத்த தேவையான ஆதரவு மற்றும் விழிப்புணர்வை இந்த மாநாட்டின் மூலம் வழங்குவதுமே எமது நோக்கம் என்றார்.