பள்ளிமுனை காணி அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!

433 0

staticmapமன்னார் பள்ளிமுனைப் பகுதியில் கடற்படையினருக்கென காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பள்ளிமுனைப் பகுதியில் 22 குடும்பங்களுக்குச் சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென இன்று(புதன்கிழமை) காலை அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கைக்கு, காணி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், தாம் பிரதேச செயலரின் அனுமதியுடனேயே அளவிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக நில அளவீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி ஏற்கனவே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த காணிக்காக இதுவரை 20 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 26ஆம் திகதி 21ஆவது வழக்கு நடைபெறவுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கான ஆதாரக் கடிதம் ஒன்றைத் தருமாறு நில அளவையாளர்கள் அம்மக்களிடம் கோரியிருந்தனர்.

இந்நிலையில், வழக்குத் தாக்கல் செய்த காணி உரிமையாளர்கள் சார்பில் இருவர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கிய பின்னர் நில அளவையாளர்கள் அவ்விடத்தைவிட்டுச் சென்றதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.