250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய திட்டத்தை முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. இதற்காக விசேட மென்பொருள் ஒன்றை உருவாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாப தலைவர் பில் கேட்ஸின் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பில் கேட்ஸ் நற்பணி மன்ற பிரதிநிதிகள் இலங்கையின் விவசாயத்துறைக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
விவசாயத்துறை மற்றும் அதன் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தல், போஷாக்குத் தன்மையை அதிகரித்தல் போன்ற விடயங்களில் நவீன தொழில்நுட்பத்தை உட்புகுத்தலுக்கு தேவைக்கமைய, மென்பொருளை அறிமுகம் செய்யவும் பில் கேட்ஸ் மன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்தனர்.
இந்த திட்டமானது 250 மில்லியன் டொலர்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. விவசாயத்துறையின் தகவல் சேகரிப்பு, அரிசி மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளின் போஷாக்குத் தன்மையை அதிகரித்தல் என்பன இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
அதே போன்று சமூக பாதுகாப்புத் திட்டங்களை தொழில்நுட்பமயமாக்குவதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கைக்காக உருவாக்கப்படும் மைக்ரோசொப்டின் மென்பொருள்கள் விவசாயம், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கியது என பில் கேட்ஸ் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலம் ஊடாக முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.