கண்முன்னே பலர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம்: ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் கண்ணீர்

119 0

கண்முன்னே ஏராளமானோர் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம் என்று ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

ரயில் விபத்தில் தப்பி, விமானம் மூலம் சென்னைக்கு வந்த சிலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த மாணவி ராஜலட்சுமி: நான் லயோலா கல்லூரியில் படித்து வருகிறேன். தொழில் பயிற்சிக்காக கொல்கத்தா சென்றிருந்தேன். திரும்பி வரும்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பி-8 பெட்டியில் வந்து கொண்டிருந்தேன். இரவு 7 மணியளவில் ரயில் விபத்துக்குள்ளானது. நான் இருந்த பெட்டியில் சேதம் இல்லை என்றாலும், விபத்து ஏற்பட்டவுடன் பயணிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் பலருக்கும் காயம் ஏற்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

பி-5 பெட்டிக்கு முன்பு உள்ள பெட்டிகள் அனைத்தும் கவிழ்ந்த நிலையில் இருந்தன. முன்பதிவில்லா பெட்டி, படுக்கை வசதி பெட்டி என அனைத்து பெட்டிகளும் சேதமடைந்திருந்தன.

கண்முன்னே ஏராளமானோர் உயிரிழந்ததைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

தென்காசி ரமேஷ்: கொல்கத்தாவில் இருந்து வந்த ரயிலில் ஏ-2 பெட்டியில் பயணித்தேன். விபத்தின்போது ரயில் பயங்கரமாக குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்தவர்கள் கீழே விழுந்தனர். பின்னர் ரயில் நின்றுவிட்டது. முதலில் சிறிய விபத்துதான் என்று கருதினோம். ஆனால், வெளியே வந்து பார்த்தபோதுதான், பெரிய விபத்து என்பதும், பலர் உயிரிழந்ததும் தெரியவந்தது. எங்கு பார்த்தாலும் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்ற அலறல் சப்தம் கேட்டது.ரயில் பெட்டிகள் தூக்கி எறியப்பட்டிருந்தன. எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. பலருக்கு கை, கால் துண்டிக்கப்பட்டு இருந்தன. ஏராளமானோர் உயிரிழந்திருந்தனர். அருகே இருந்த கிராம மக்கள்இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, வெளியே கொண்டுவந்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு,சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.

ராமநாதபுரம் நாகேந்திரன்: கண் முன்னே விபத்து நேரிட்டது. உயிர் தப்புவோமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. விபத்தின் போது, கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ரயிலின் டிரைவர் ப்ரேக் போட்டதால்தான் நாங்கள் உயிர் தப்பினோம். படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏசி பெட்டிகளில் பெரிய பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.