காணாமல்போனோர் பற்றி அலுவலகத்துக்கு இதுவரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை அடுத்த வருட இறுதிக்குள் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்துத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கருத்துரைக்கையிலேயே லீலாதேவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின்கீழ் இயங்கக்கூடிய காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள்மீது தாம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், தமது சங்கத்தைச்சேர்ந்த 75 சதவீதமானோர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடம் முறைப்பாடளிக்கவில்லை என்றும், அறியாமையினாலோ, மிரட்டப்பட்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ முறைப்பாடளித்த 25 சதவீதமானோர் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், சர்வதேசத்தின் தலையீடின்றி இடம்பெறக்கூடிய எந்தவொரு விசாரணையிலும் தாம் பங்கெடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்த லீலாதேவி, இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பெரும் எண்ணிக்கையான தாய்மார் வறுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசதரப்புக்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் விசனம் வெளியிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு உத்தேசித்துள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான செயன்முறைகள் நேர்மையானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும், தென்னாபிரிக்காவை ஒத்த முறைமை இலங்கைக்குப் பொருந்தாது என்றும் லீலாதேவி தெரிவித்தார்.
எனவே வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதொன்றே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும். அதற்கு அவசியமான உதவிகளை சர்வதேச நாடுகளும், மனித உரிமைகள் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.