பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல விவகாரம் : பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம்

98 0

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு நேர்மையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஏற்கனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அதுபற்றிய கரிசனைகள் மற்றும் திருத்த முன்மொழிவுகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அதற்கமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனைகளையும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களையும் உள்ளடக்கி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைப் பொறுத்தமட்டில் ‘பயங்கரவாதம்’ என்ற பதத்துக்கு மிக விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளமை, குற்றச்சாட்டுக்களின்றித் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கும் தடுப்புக்காவல் காலத்தை நீடிப்பதற்குமான வாய்ப்பு காணப்படல், ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை, அதிகரித்த இராணுவமயமாக்கல் என்பன மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அச்சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெறவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தாமதமானதும், அவசரமானதுமான நடவடிக்கைகள், அச்சட்டமூலம் தொடர்பில் நிலவும் முக்கிய கரிசனைகள் நிவர்த்திசெய்யப்படாமல் இருப்பதற்கும் பிரச்சினைக்குரிய செயன்முறையின் மூலம் தயாரிக்கப்பட்ட சட்டவரைபாக அமைவதற்குமே வழிவகுக்கும்.

எனவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு நேர்மையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருக்கவேண்டும்.

அதனூடாகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் உண்மையான தாக்கங்கள் மற்றும் அதன்விளைவாக மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், சித்திரவதைகள், மீறல்கள் என்பவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். அதன்படி அனைத்துத்தரப்பினருடனான கலந்துரையாடலுடன், வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால சட்டமறுசீரமைப்புச் செயன்முறைகளுக்கு அவசியமான சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி தற்போதைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிருக்கும் மாற்றுக்கொள்கைளுக்கான நிலையம், எதிர்வருங்காலங்களில் தயாரிக்கப்படும் சட்டவரைபுகளில் இவ்விடயங்கள் திருத்தியமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.