ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இன்னமும் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியாத ஒரு நிலை காணப்படுவதால், இந்திய அரசு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஏழு மாதக் குழந்தையான அரிஹா தனது பெற்றோருடன் ஜேர்மனியில் வாழ்ந்துவரும்போது கடுமையாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேர்மன் இளைஞர் நல அலுவலகம் பிள்ளையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
அரிஹாவின் பெற்றோரான தாராவும் பவேஷ் ஷாவும் இந்தியா திரும்பிவிட்ட நிலையிலும், இப்போது இரண்டு வயதைக் கடந்துவிட்ட அரிஹா ஜேர்மனியிலேயே இருக்கிறாள்.
அவளை ஒரு இந்தியக் குடும்பம் பொறுப்பெடுத்துக்கொள்ள முடிவு செய்த நிலையில், அது தொடர்பான செய்தி இந்தியாவில் பெருமளவில் பிரபலமடைய, அந்த குடும்பத்தினர் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
ஆகவே, ஜேர்மன் அதிகாரிகள் வேறொரு குடும்பத்தைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. இப்படி குழந்தை அலைக்கழிக்கப்படுவதால் அதன் பெற்றோர் கவலையடைந்துள்ளார்கள்.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Arindam Bagchiம் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அரிஹா தாக்கப்பட்டது தொடர்பாக தாரா, பவேஷ் தம்பதியர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் விலக்கிகொள்ளப்பட்ட பின்பும், ஜேர்மன் அதிகாரிகள் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்பவில்லை.
குழந்தையை அதன் பெற்றோர்தான் தாக்கினார்களா என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், குழந்தை மோசமாக தாக்கப்படிருந்தது உண்மை என்று கூறும் ஜேர்மன் அதிகாரிகள், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்கள் என்கிறார்கள்.
இந்திய அரசு அரிஹாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தாலும், இந்த விடயம் தொடர்பான வழக்கு ஜேர்மனியில் நடந்துவருவதால், அவள் இந்தியாவுக்கு திரும்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.