கடத்தல் குற்றச்சாற்று தொடர்பில் மார்ச் 12 இயக்கம் வெளியிட்டுள்ள தகவல்

107 0

கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர டேனியல், நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் மூலம் இந்த விடயத்தில் ஒரு ஜெயவர்த்தன முன்னுதாரணமாக விளங்கினார் என்று மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்கத்தை கடத்த முயன்றதாக அண்மையில் கைது செய்யப்பட்ட  அலி சப்ரி ரஹீம், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது நடவடிக்கையின் மூலம் இன்றைய அரசியல்வாதிகள் மீது மக்கள் உருவாக்கியுள்ள எதிர்மறையான எண்ணத்தை உறுதி செய்துள்ளார் என்று மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

72 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை கடத்த முற்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் செய்த குற்றம் கடுமையானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன் அவர் கடந்த காலங்களிலும் இதுபோன்ற குற்றங்களைச் செய்தாரா என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.