பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளில் அதிக கரிசனை செலுத்தி போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என வடமாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஹேரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களால் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக வடபகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களால் போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதை திடீரென தடுக்க முடியாது, ஆனாலும் போதைப் பொருள் பாவனைகளை குறைக்க வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்களும் பாடசாலைகளில் ஆசிரியர்களும் அதிக கரிசனை செலுத்தி போதைப் பொருள் பாவனையாளர்களை குறைக்க வேண்டும்.
பாவனையாளர்களை குறைக்காத வரையும் வேறு வழிகளில் கட்டுப்பாடுகளை போடுவதன் மூலம் அவை வேறு வடிவங்களில் மிக கூடிய விரைவில் இந்த இடங்களில் கிடைத்து விடும்.இது உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும் இது தொடரவே போகின்றது.
குறிப்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் இளமைக்காலத்தில் அதாவது 16 வயது தொடக்கம் 26 வயது வரையான வயதெல்லைகளை கொண்டவர்களே அதிகளவில் இவ்வாறான பிரச்சனைக்குரியவர்களாகவும் காணப்படுகின்றனர்.
ஆகவே இந்த வயதெல்லை உடையவர்களை மிகவும் அவதானமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்களும் பாடசாலைகளில் ஆசிரியர்களும் பிள்ளைகளில் அதிக கரிசனை செலுத்தி போதைப் பொருள் பாவனையை தடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.