யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் நாட்டில் தமிழ் மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதனை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் நாட்டில் சுந்திரமாக செயற்பட முடியாத ஜனநாயக சூழல் காணப்படுகிறது என்றால் அப்பாவி தமிழ் மக்களின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்? அவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதனை சிந்தித்து பாருங்கள் எனத் தெரிவித்துள்ள அவர் தன்னுடைய மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை, பிரச்சினைகளை கேட்டறிவதற்கு கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் சுந்திரம் இல்லாத நிலைமை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்கள் என்பன தமிழ் மக்கள் மீது யுத்தம் நிறைவுற்று 14 ஆண்டுகள் கடந்தும் இடம்பெற்று வருகிறது. இது இனங்களின் நல்லிணக்கத்திற்கும், நிலையான சமாதானத்திற்கும் ஏற்புடையதல்ல. இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையே குரேதத்தை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே செல்லும்.
எனவே இச் சம்வபங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் மற்றும் அவரது செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.