லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலை திருத்தத்தின் போது எரிவாயு விலை குறைக்கப்பட்டது.
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,638 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,462 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 681 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நாளை நள்ளிரவு இடம்பெறும் விலை திருத்தத்தின் பின்னர், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,238 ரூபாவாக குறைவடையவுள்ளது.
இதேவேளை, எரிவாயு விலை திருத்தத்தின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு நுகர்வோர் அதிகாரசபையின் தலையீட்டுடன் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.