70 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர்கள் ஐவர் இந்தியாவில் கைது

126 0
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 70 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்துடன் 5 பேரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய கடலோரக் பாதுகாப்பு படை  வருவாய் புலனாய்வு கண்காணிப்புப் பிரிவு மற்றும் சுங்கத் திணைக்களம் இணைந்து நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் இரண்டு படகுகளில் கொண்டு செல்லப்பட்ட 32 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத பொருட்கள் கடத்தல் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசேட நடவடிக்கையில் பிரகாரம் கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அதன்படி, மன்னார் வளைகுடாவைச் சுற்றியுள்ள இந்திய-இலங்கை சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடி படகுகளை  கண்காணித்தபோது தமிழகத்தின் மண்டபம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த சந்தேகத்துக்குரிய இரண்டு படகுகளை சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் படகில் பயணித்த கொண்டிருந்தவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்வதற்கு முயன்ற போது அவர்கள் 11 கிலோ தங்கத்தை கடலில் வீசியுள்ளனர். இருப்பினும்  இரண்டாவது கப்பலிலிருந்து 21  கிலோ நிறையுடைய தங்கத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்கள் கடலில் வீசிய தங்கமும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் தொடர்பில் இந்திய வருவாய் புலனாய்வு கண்காணிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.