குடா கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை நீடிப்பு

81 0

களு கங்கை ஆற்றின் குடா கங்கை துணைப் படுகையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை ( 02)  விடுக்கப்பட்ட ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறியளவிலான வெள்ளம் ஏற்படக் கூடும் எனவும், குடா கங்கை வெள்ள சமவெளி ஊடாக செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடா கங்கையில் உள்ள நீரியல் நிலையங்களின் மழை நிலவரங்கள் மற்றும் நதி நீர் மட்டங்களை ஆய்வு செய்த பின்னர் வெள்ள எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது.

இந்த பகுதிகளை கடந்து செல்லும் குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மகுரவில் உள்ள மகுரு கங்கை மற்றும் பத்தேகமவில் உள்ள ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.