நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொலைபேசி மூலமாக நேற்றையதினம் (03.06.2023) முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது.
இந்த நாட்டின் தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.