காணாமல்போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிக்க எதிர்பார்ப்பு

90 0

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயத்துக்கு இதுவரை 21ஆயிர்தி 374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 3ஆயிரத்தி 170 முறைப்பாடுகள் தொடர்பாக பூரண விசாரணை நடத்தி முடித்துள்ளோம்.

எஞ்சிய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த வருடம் இறுதிக்குள் முடிப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆராயும் அலுவலகத்தின் முன்னேற்ற நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (2) நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் 2016இல் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாலணைகளின் பிரகாரம் யுத்தம் காரணமாக மரணித்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களுக்காக சான்றிதழ் விநியோக்கிறோம்.

பாதிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக ஆராய இழப்பீட்டு காரியாலயம் ஆரம்பித்தோம். இனங்களுக்கிடையிலான ஐக்கியம் நல்லிணக்கத்தை மேலும் விருத்தி செய்வதை நோக்காகக்கொண்டு தேசிய ஐக்கியம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கான காரியாலயம் ஆரம்பித்தோம்.

இந்த காரியாலயத்தின் கீழ் கிராமங்களில் ஐக்கியம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதற்காக கிராம மட்டத்தில் அமைக்கப்படுகின்ற நல்லிணக்க குழுக்களை அமைக்க ஆரம்பித்திருக்கிறோம்.

கிராம மட்டத்தில் அமைக்கப்படும் இந்த நல்லிணக்க குழுக்கள் ஊடாக கிராமங்களின் சமாதானம், ஐக்கியத்தை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். இந்த குழுக்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டம் ஒன்றை அமைத்திருக்கிறோம்.

மேலும் வடமாகாண மக்களுக்கு ஆவணங்கள் தொடர்பாக இடம்பெற்றுவந்த சட்டப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அந்த மாகாணத்துக்குள் 4 நடமாடும் சேவைகளை முன்னெடுத்தோம். இதன்போது யுத்தத்துக்கு பின்னர் இந்தியாவில் இருந்து சுமார் 12ஆயிரம் பேர் வரை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர்.

அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக காணிகளுக்கு உரித்து இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லை. தேசிய அடையாள அட்டை இல்லை, குறிப்பாக இலங்கையராக வாழ்வதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லாமல் இருந்தது.  அதனால் அந்த மாகாண மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளில் நூற்றுக்கு 90வீத தீர்வை பெற்றுக்கொடுத்தோம்.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்துக்கு பிறகு சுமார் 35வருட காலத்துக்கு பின்னர் நாங்கள் கடந்த வாரம் கிழக்கு மாகாண மக்களுக்காக விசேட நடமாடும் சேவை ஒன்றை மேற்கொண்டோம். அதன் ஊடாக ஆயிரம் பேர் வரையான மக்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தோம். ஒருசலருக்கு பல வருடகாலமாக இருந்துவந்த காணப்பிரச்சினைக்கு தீரவு பெற்றுக்கொடுத்தோம்.

மேலும் 2016இல் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக திருப்தியடைய முடியாமல் இருந்தது.

அதனால் அதன் நடவடிக்கைகளை முறையாக செயற்திறமையாக்கி இருக்கிறோம். காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் அலுவலகத்துக்கு இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பில் 21374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அதில் 6386 முறைப்பாடுகள் முப்படைகளின் உறுப்பினர்கள் தொடர்பானவை என்பதுடன் ஏனைய 14988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் இதுவரை 3170 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை முடிவடைந்திருக்கின்றன. ஏஞ்சிய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் முடிப்பதற்கே நாங்கள் முயற்சிக்கிறோம்.