‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்!

185 0

நாட்டின் இறுதிக்கட்ட போரில் செய்யப்பட்ட இனப் படுகொலைகளையும், போரில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் பல நிகழ்வுகளை கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இடம்பெற்றது.

யுத்தம் முற்றுப்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், போர் முரசு கொட்டப்படுவதற்கு முதற்புள்ளி இடப்பட்டது எப்போது, யாரால் என்பதை அறியாத தரப்பினருக்கே இந்த பதிவு.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவே 1987 மே 26 அன்று முதல் முதலாக யுத்தத்தை ஆரம்பித்தார். யாழ். குடாநாட்டை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அவர் புலிகளுக்கு எதிராக வடமராட்சியில் போரிட முன்னின்றார். அதன் பின்னர், இந்தியாவின் தலையீட்டால் அந்த போர்க்கொதிப்பு தற்காலிகமாக தணிந்தது.

அன்று ‍ஜே.ஆர். ஆரம்பித்த யுத்தத்தை 2009 மே 18ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முடித்துவைத்தார்.

“1987 மே, ஜூன் மாதங்களில் விடுதலைப் புலிகளை (Liberation Tigers) ஒழிப்பதற்காக இராணுவத்தினரால் ‘லிபரேஷன் ஒபரேஷன்’ (Liberation Operation) – ‘விடுதலை நடவடிக்கை’ என பெயரிடப்பட்டது. வடமராட்சிக்கு பின்பு குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்போம். புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை தடை செய்து, தனித்து இயங்கியதால் அவர்களை அழிப்பது சுலபமானது” என அன்றைய அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருந்தார்.

“பிரபாகரனும் மூத்த தலைவர்களும் அவர்களோடு ஏராளமான ஆயுதங்களும் வல்வெட்டித்துறையில் இருப்பதாக எமது புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களே லிபரேஷன் ஒபரேஷனை முன்னெடுப்பதற்கான முக்கிய காரணம்” என கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க எழுதிய ‘Adventurous Journey : From Peace to War, Insurgency to Terrorism’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“விடுதலைப் புலிகளுக்கு இந்திய உளவுப் பிரிவு ‘றோ’ (RAW) ஆயுதங்களை வழங்குவது எமக்கு தெரியவந்தது. எனினும், இந்திய அரசும் றோவும் இதனை மறுத்தன.

புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை படையினரை இந்தியா அனுமதிக்காது. காயமடைந்த புலிகள் சிகிச்சைக்காக கடல் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்வதையும் நாம் அறிவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கூட்டுப்படை தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருக்கு ஒபரேஷனை விளக்கும் படம்.

1987 ஜூன் 4ஆம் திகதி இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களை யாழ். குடாநாட்டில் போட்டதால், வடமராட்சி போரை நிறுத்துமாறு ஜனாதிபதி ஜெயவர்தன எனக்கு உத்தரவிட்டபோது நான் மறுத்தேன். இதனால் கோபமடைந்த அவர், ‘இந்தியாவுடன் நாம் போர் புரியமுடியாது’ என்றார்.

போர்க்களத்தில் இத்தகவலை படையினருக்கு கூறி, போரை நிறுத்துமாறு அறிவித்தபோது அவர்களின் முகத்தில் ஏமாற்றத்தை கண்டேன். படையினர் ‘இந்தியா எப்படி இதனை செய்யலாம்’ எனவும் கேட்டனர். அத்தோடு, ‘லிபரேஷன் ஒபரேஷன்’ நிறுத்தப்பட்டது” எனவும் ஜெனரல் ரணதுங்க அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1987 மே 26 காலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், அதனால் மக்களை ஆலயங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வானொலியில் அறிவிக்கப்பட்டதுடன், ஹெலிகொப்டர்களில் இருந்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன.

அதனையடுத்து, மக்கள் பாடசாலைகள், ஆலயங்களில் தஞ்சமடைந்தனர். யாழ். குடாநாட்டில் முதல் முதலாக மக்களின் இடம்பெயர்வு வடமராட்சியிலேயே இடம்பெற்றது. மாட்டு வண்டில்கள், லாண்ட்ரமாஸ்ரர், உழவு இயந்திரங்கள், சைக்கிள்களில் தமது பொருட்களுடன் அதிகாலையில் இருந்து தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு நோக்கி சென்றனர்.

அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மீது 1987 மே 29 நடத்தப்பட்ட எறிகணை வீச்சால் அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலரின் உடல்கள் உருக்குலைந்தன. பலர் காயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு செல்லமுடியாத நிலையில் காணப்பட்டனர்.

அப்போரில் சுமார் 8000 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். எறிகணைகள், விமானக் குண்டுவீச்சுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் குடாநாடே அதிர்ந்தது. இராணுவப் படையினர் வருவதைத் தடுக்க விடுதலைப் புலிகளும் போராடினர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் போதிய ஆட்பலம் இருக்கவில்லை.

தொண்டமானாறு முதல் பல திசைகளிலும் இராணுவத்தினர் முன்னே விரைந்து சென்றனர். மணற்காடு, மண்டான், முள்ளி பகுதிகளில் ஹெலிகொப்டர்கள், கடற்படை படகுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

அந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னர் வடமராட்சி பகுதி 1987 ஜூன் 1ஆம் திகதி இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பல இடங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன.

சுமார் 5000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கப்பல் மூலம் காலி பூசா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். சில இளைஞர்கள் ஓடவிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பெருமளவினர் காயமடைந்தனர்.

இந்நிலையில், வடமராட்சியில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்வதற்கு கொடிகாமம் வீதியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, முள்ளி சந்தியில் சோதனை நிலையமும் அமைக்கப்பட்டது. அத்தோடு, வல்லை வீதியும் மூடப்பட்டது.

நடந்த போர் நடவடிக்கையில் இந்தியா தலையிடாமல் இருந்திருந்தால், வெளிநாடுகளின் உதவியுடன் யுத்தத்தையும் முடித்து விடுதலைப் புலிகளையும் ஒழித்திருப்பேன் என ஜனாதிபதி ஜெயவர்தன அப்போது இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

“புலிகளுடன் நாம் யுத்தம் புரியும்போது தடுத்தீர்கள்; இன்று உங்களுக்கு வீண் செலவுகளும் பாரிய அழிவுகளுமே எஞ்சியுள்ளது” என 1987 ஒக்டோபர் 10ஆம் திகதி விடுதலைப் புலிகள் – இந்திய படை மோதல் ஆரம்பமான போது ஜனாதிபதி ஜே.ஆர். அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிற்றிடம் கூறினார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கொழும்பில் ஜனாதிபதி ஜே.ஆரை சந்தித்து புலிகளுக்கு எதிராக இந்திய படையினர் யுத்தத்தை ஆரம்பிக்க அனுமதி கேட்டபோதும், “நானும் இதனையே செய்தபோது கண்டித்தீர்கள்! எனது படையினரின் போரை உங்கள் படையினர் இப்போது முன்னெடுக்கின்றனர்” என்றே கூறினார்.

ஆக, வடமராட்சி போருக்குப் பின்னர், ஜூன் 4ஆம் திகதி அச்சுவேலி ஊடாக படை நகர்வை ஆரம்பித்து, யாழ். குடாநாட்டை முழுமையாக அரச கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு முடிவு எடுத்தது.

ஜூன் 4 – இந்திய விமானம் மூலம் உணவுப்பொருட்கள் குடாநாட்டில் போடப்பட்டதால் போர் நிறுத்தப்பட்டது. சுதந்திரமடைந்த பின்னர், நாட்டில் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கை லிபரேஷன் ஒபரேஷனே ஆகும்.

1971 ஏப்ரலில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஆயுதப் போராட்டத்தை ஒழிக்க விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதில்லை. சிங்கள மக்களும் அகதிகளாக இடம்பெயர்ந்ததில்லை.

1971 – சிறிமாவோ ஆட்சியில் ஜே.வி.பி. சிங்கள இளைஞர்கள் கைதாகி விசேட நீதிமன்றத்தால் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

1977 – பதவிக்கு வந்த ஜே.ஆர். அந்த சிங்கள  இளைஞர்களுக்கு மன்னிப்பளித்தார். ஆனால், தமிழ் இளைஞர்களை தடுத்துவைக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை 1979இல் அமுல்படுத்தினார்.

இறுதிப்போர் 2009 மே 18 முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

“யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் நான்கு ஜனாதிபதிகள் ஆட்சியில் அந்த போரை நிறுத்த முடியாமல் போனதற்கான காரணங்களை ஆராய்ந்தோம். படையினர் எண்ணிக்கையை அதிகரித்தோம். பல திட்டங்களை வகுத்தோம். வெற்றி பெற்றோம்” என குறிப்பிட்டிருந்தார்.

எனவே, போரின் ஆரம்பகட்டத்தில் இராணுவத்தினர் எடுத்த நடவடிக்கைகள், சதித்  திட்டங்களையும் கூட இனப் படுகொலை நினைவேந்தல்கள் நினைவில் நிறுத்துகின்றன.