அனைத்து பள்ளிகளிலும் 9-ந் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

92 0

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண் மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கல்வி ஆண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தமது படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளியின் அருகில் உள்ள வீடுகளில் யாரேனும் மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தால் அக்குழந்தையின் பெற்றோரை மேலாண்மை குழுவினர் சந்தித்து பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும். சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தொடருதல் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.