மேகேதாட்டு அணைக்கு எதிராக டெல்லி சென்று போராட தயார் – விவசாய சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தகவல்

100 0

தமிழக காவல்துறை அனுமதித்தால் மேகேதாட்டு அணைக்கு எதிராக டெல்லி சென்று போராடத் தயாராக இருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், மேகேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தற்போது, மேகேதாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமைதி காப்பது ஏன் என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியது: மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கெனவே தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு தற்போது 20 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. தற்போது அங்கு அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.

இந்த விஷயத்தில் மத்திய பாஜக அரசு கர்நாடகத்துக்கு சாதகமாகவே செயல்படும் வாய்ப்பு அதிகம். இதுதொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுதான் தீர்வு காண வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலையை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை டெல்லியில் விவசாயிகளுடன் சென்று போராடினேன்.

ஆனால், அதன்பிறகு டெல்லிக்கு செல்ல என்னை அனுமதிப்பதில்லை. போராட்டம் அறிவித்தாலே என்னை வீட்டுச் சிறையில் வைத்து விடுகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அக்கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் என்னை தடுத்தனர். ஆனால், பாஜகவுக்கு எதிர்ப்பு நிலையில் உள்ள திமுக அரசு ஏன் என்னை தடுக்கிறது என தெரியவில்லை. உரிமைக்காக போராடுவதற்கு தடை விதிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

மேலும், விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட இப்போதெல்லாம் முன்வருவதில்லை. பலருக்கு குடும்ப சூழல், பலர் நமக்கு ஏன் பிரச்சினை என இருந்து விடுகின்றனர். நாம் நமது உரிமைக்காக போராடினால் தான் அதற்கு தீர்வு கிடைக்கும். தமிழக காவல் துறை அனுமதித்தால் மேகேதாட்டுவுக்கு எதிராக டெல்லி சென்று போராடத் தயாராக உள்ளேன் என்றார்.