உயிருடன் உள்ள தாய்க்கு சிலை

125 0

இந்தியாவில் தமிழகத்தில் உயிருடன் உள்ள தாய்க்கு கோயில் கட்டி வரும் மகன், கோயிலுக்குள் தாயின் சிலையை வைத்து அவரது கையாலேயே திறந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு (30) கோயில் ஒன்றைக் கட்டி அதில் 3 அடி உயரத்தில் தனது தாயின் உருவச் சிலையை அமைத்த நிலையில், தாயைக் கொண்டே வியாழக்கிழமை  (1) அந்த சிலையை திறந்து வைத்தார்.

இதுகுறித்து பிரபு கூறியதாவது,

“எனது தந்தை வாசு 2003ல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அப்போது எனக்கு 10 வயது, என் தங்கை ஜீவாவுக்கு ஒன்பது வயது. தந்தை இறந்தவுடன் எனது தாய் மணி (48), எங்களை வளர்த்து ஆளாக்க கடுமையாக போராடினார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த நான் வெல்டிங் தொழிலை கற்று தேர்ந்து, கூலிப்பட்டியிலேயே சொந்தமாக பட்டறை அமைத்தேன். தொழில் நல்ல முறையில் நடந்ததால், தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். என் திருமணமும் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

பாடுபட்டு வளர்த்த தாயை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறேன். ஆனாலும், அவரை என்றும் நினைவில் வைத்திருக்க விரும்பிய நான், கூலிப்பட்டி – சிவியாம்பாளையம் சாலை சக்தி நகரில் 1,500 சதுர அடியில் நிலம் வாங்கி கோயில் கட்டிவருகிறேன். அதன் பணிகள் விரைவில் முழுமையாக  நிறைவடையும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 அடி உயரம், 80 கிலோ எடையில், தாயின் முழு உருவச் சிலையை தயாரித்து கொண்டு வந்தேன். இந்த விஷயம் அனைத்தும் திறப்பு விழா நடந்த பிறகே தாய்க்கும், குடும்பத்தாருக்கும் தெரியும். இந்த கோயில் என்னுடைய கனவு” என்று கூறினார்.

இதுகுறித்து பிரபுவின் தாய் மணி கூறும்போது,

“இப்படி ஒரு மகனை பெற்றெடுத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு தெரியாமலே எனது சிலையை தயாரித்து, நண்பன் வீட்டில் பாதுகாத்து வந்துள்ளான். தற்போது, என் மூலமாகவே அதை திறந்து வைத்து, என்னை பெருமைப்படுத்தி உள்ளான்” என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார்.

பொதுவாக, இறந்தவர்களுக்கு தான் சிலை வைப்பார்கள். ஆனால், பாசம் மிகுந்த மகன் உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்திருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்து, பிரபுவை பாராட்டிச் செல்கின்றனர்.