மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைத்து ஏனைய பிரச்சினைகளை மேலாேங்கச்செய்ய அரசாங்கம் முயற்சி

88 0

மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைத்து வேறு விடயங்களை தெரிவித்து அவர்களை தூண்டிவிடும் நடவடிக்கையை  அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களிள் பொருளாதார நெருக்கடியை மறைத்து அவர்களை வேறு விடயங்களில் தூண்டுவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் ஊடாக பிரச்சினை தீரும் என்றே அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.

பட்டாசுகொழுத்தியும் வேறு நடவடிக்கைகள் மூலமுமே அரசாங்கம் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. என்றாலும் தற்போது நாணய நிதியத்தின் பணம் கிடைத்து சில மாதங்கள் கடந்துள்ளன. அதனால் இது  இலகுவான விடயம் அல்ல என்பது மக்களுக்கு விளங்குகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்த்து மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு வழங்கவில்லை.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போயிருக்கின்றன. உழைக்கும் வருமானம் அன்றாட தேவைக்கும் போதாமல் இருக்கிறது. கல்வி, சுகாதாரம் போக்குவரத்து, உணவு பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு பிரச்சினையாகி இருக்கிறது.

அவை அனைத்தும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் மக்களின் எதிர்பார்ப்புகள் இல்லாமல் போகின்றன. இந்த நெருக்கடிகளை மறைப்பதற்காக அரசாங்கம் வேறு விடயங்கள் மூலம் மக்களை தூண்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் நாட்டைவிட்டு செல்கின்றனர். இதனால் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும். பல்கலைக்கழகங்களில் மேலும் பிரச்சினைகள் ஏற்படும்.

கற்பிப்பதற்கு போதனா ஆசிரியர்கள் இல்லை. வைத்தியசாலைகள் மருந்து பொருட்கள் மாத்திரமல்ல, தாதியர்களும் இல்லை, வைத்தியர்களும் இல்லை. விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு செல்கின்றனர். இவை மக்களின் வாழ்க்கைக்கு பாரியளவில் பாதிக்கும் விடயங்களாகும்.

ஆனால் அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளாமல் அவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அவர்களின் திருடுத்தனமாக விடயங்களை மறைத்து அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களே நாட்டில் இருக்கின்றனர் என்றார்.