இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் சில அரசியல்வாதிகளின் சுயநலமான சிந்தனைகளை தோற்கடிக்க வேண்டும்.
இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் சுய சிந்தனையோடு செயற்படுவது அவசியம் என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் தெரிவித்தார்.
இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும்.
இது தொடர்பில் வெறும் வாய் வார்த்தைகளை மாத்திரம் கூறிக்கொண்டிருக்காமல், சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் புதன்கிழமை (31) காலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“மத நம்பிக்கை மற்றும் மத குருமார்களை நிந்திக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
குறிப்பாக சமூக ஊடகங்களில் இதுபோன்று கருத்துகளை வெளியிடும் நபர்களின் எண்ணிக்கை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளமை காண முடிகிறது. இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
இனவாத, மதவாத குழப்பங்களை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு சில அரசில்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அவ்வாறான அரசியல்வாதிகள், பல்வேறு நபர்களையும், அமைப்புக்களையும் கடந்த காலங்களிலும்கூட பயன்படுத்தப்பட்டிருந்தனர். அது போன்றதான ஓர் சூழ்ச்சியின் ஓர் அங்கமாகவே, தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகள் சுயநலமாக சுகபோகிகளாக வாழ்வதற்கு, மக்களை பலி கடாவாக ஆக்குவதற்கான செயற்பாடுகளை நடைபெற்று வரப்படுகிறது.
இதன் காரணமாக எமது நாடும் மக்களும் தாங்கிக் கொள்ள முடியாத இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படவுள்ளமை காண முடியும்.
பெளத்த மதத்துக்கும் இந்நாட்டின் ஏனைய மதங்களுக்கும் எதிரான கருத்துக்களை வெளியிட்டவர்கள் குறித்து ஆராய்வதோடு, அவர்களுக்கு பின்புலமாக செயற்படுபவர்கள் மற்றும் அமைப்புக்கள் குறித்தும் விரிவான, நேர்மையான, நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மையை வெளியிடுவது பொலிஸார் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவினரின் பாரிய பொறுப்பாகும்”என்றார்.