திட்டமிட்ட குற்றக் குழுவின் தலைவன் எனக் கூறப்படும் ஹரக்கட்டாவின் பணப் பரிமாற்றங்களை இணையத்தின் ஊடாக நிர்வகித்தார் எனக் கூறப்படும் நபர் இன்று (31) கைதுசெய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல, ரணால படேவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணினி பொறியியலாளரான இவர், ஹங்வெல்ல ரணால பிரதேசத்தில் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான காசோலைகளை வழங்கி மக்களை ஏமாற்றிய நபர் என தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.