கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த அறிக்கையை எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிர்மாணப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் அபிவிருத்தியாளர்கள் அவற்றை நியாயமான விலையில் வழங்குவதுடன், கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.
பத்தரமுல்லை அமைச்சின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (30) கூட்டு ஆதன உரிமையாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் திரு.சரண கருணாரத்ன, அமெரிக்க டொலரின் பெறுமதி சுமார் 75 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இரும்பு, சீமெந்து உள்ளிட்ட நிர்மாணப் பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இறக்குமதி செய்யப்படும் நிர்மாணப் பொருட்களுக்கு மேலதிகமாக உள்ளூர் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக புதிய நிர்மாணங்களை ஆரம்பிக்கவோ அல்லது முழுமையாக நிர்மாணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலை காரணமாக நிர்மாணத்துறையில் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடருமானால் துறைமுக நகரின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் பாரியளவில் பாதிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கருத்து தெரிவித்தார்.
நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிர்மாணத் துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய வியாபாரத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த நிர்மாணத் துறையும் முடங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த நாட்டில் உள்ள நிர்மாணப் பணிகளின் நிலைமையை படிப்படியாக மீட்டெடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த, கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சரண கருணாரத்ன, கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சமில ஹேரத், கூட்டு ஆதன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. பிரேமலால் உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.